போடி அருகே மின்வேலியில் சிக்கி தோட்ட காவலாளி பலி


போடி அருகே மின்வேலியில் சிக்கி தோட்ட காவலாளி பலி
x
தினத்தந்தி 29 May 2023 2:30 AM IST (Updated: 29 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே மின்வேலியில் சிக்கி தோட்ட காவலாளி பலியானார்.

தேனி

போடி புதூர் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 39). தோட்ட காவலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், போடி அருகே உள்ள மரிமூர் பகுதியில் உள்ள தோட்டத்துக்கு காவல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், பாலாஜியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதற்கிடையே நேற்று மதியம் மரிமூர் கண்மாய் அருகே வரத்துக்கால்வாயில் பாலாஜி பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குரங்கணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், போடி புதூரை சேர்ந்த சடையன் என்பவர், மரிமூர் பகுதியில் உள்ள குழந்தைவேலு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இதற்கிடையே தோட்டத்தில் பயிரிட்டிருந்த சோள பயிரை காட்டு விலங்குகள் சேதப்படுத்தி வந்தது. இதனால் விலங்குகள் தோட்டத்துக்குள் நுழைவதை தடுக்க சடையன் மின் வேலி அமைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று காலை பாலாஜி வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபோது, எதிர்பாராதவிதமாக அந்த மின் வேலியில் சிக்கினார். அப்போது மின்சாரம் பாய்ந்து பாலாஜி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து பாலாஜியின் அக்காள் சாந்தி, குரங்கணி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சடையன், குழந்தைவேலு ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story