கழுத்தில் மாலை, நெற்றியில் நாணயம் வைத்து மனு கொடுத்த முதியவர்
கழுத்தில் மாலை, நெற்றியில் நாணயத்தை வைத்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு முதியவர் ஒருவர் மனு கொடுக்க வந்தார்.
மாலை அணிந்து வந்த முதியவர்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகைதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர். அதன்படி வேடசந்தூர் அழகாபுரி சின்னபொம்மன்பட்டியை சேர்ந்த துரைச்சாமி (வயது 82) என்பவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
இவர் தனது கழுத்தில் மாலை அணிந்து மூக்கில் பஞ்சு வைத்து, நெற்றியில் நாணயத்தை வைத்து கொண்டு இறந்தவர் போன்று குடும்பத்துடன் வந்து மனு கொடுத்தார்.
அந்த மனுவில், எனது பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலையில் நான் ஓடையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி எனது வீட்டு கதவில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். மேலும் எனது விவசாய நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, நிலத்தில் உள்ள மண்ணை அள்ளி உள்ளனர். மரங்களை வெட்டி விட்டனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கட்டுமான தொழிலாளர் சங்கம்
மேலும் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையிலான நிர்வாகிகள் கொடுத்த மனுவில், கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஒய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். ஆண்களுக்கு 60 வயதிலும், பெண்களுக்கு 55 வயதிலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரிய அட்டை புதுப்பித்தலுக்கு தொழிற்சங்க அங்கீகாரம் பெறவேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம், விபத்தில் இறந்தால் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் மனுக்களை 30 நாட்களில் பரிசீலனை செய்து உதவித்தொகை வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.