கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு சேதம்
தூத்துக்குடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு சேதம் அடைந்தது.
தூத்துக்குடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு சேதம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிலிண்டர் வெடித்தது
தூத்துக்குடி புதுகிராமத்தை சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவருடைய மனைவி வள்ளி. இவர்கள் அந்த பகுதியில் ஒரு வீட்டில் உள்ள முதியவர்களுக்கு உதவியாக வேலை பார்த்து வருகின்றனர். அந்த வீட்டின் பின்பகுதியில் உள்ள ஒரு அறையில் தங்கி இருந்தனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவர்கள் 2 பேரும் வெளியே சென்று விட்டனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தன. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படையினர் சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) முருகையா தலைமையில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தென்பாகம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.