கடையில் கியாஸ் சிலிண்டர் தீ பிடித்ததால் பரபரப்பு
கோத்தகிரியில் கடையில் கியாஸ் சிலிண்டர் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அங்குள்ள ஒரு கடையில் சம்சுதீன் என்பவர் மீன், கோழி வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அவரது கடையில் கியாஸ் சிலிண்டர் மற்றும் கோழி சுத்தம் செய்யும் எந்திரத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கு புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சம்சுதீன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், அது பலன் அளிக்கவில்லை. பின்னர் தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் மாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் அங்கிருந்து கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். தகவல் அறிந்த தாசில்தார் காயத்ரி, பள்ளி விட்டு மாணவ-மாணவிகள் செல்லும் நேரத்தில் தீ விபத்து ஏற்பட்ட காரணத்தால், பாதுகாப்பு கருதி அந்த வழியாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லாத வகையிலும், கடைக்கு பின்புறம் உள்ள தாசில்தார் அலுவலக சாலையில் போக்குவரத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தும் நடவடிக்கை எடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.