800 டாக்டர்கள் மூலம் தன்னம்பிக்கை கவுன்சிலிங்
தமிழகம் முழுவதும் 800 டாக்டர்கள் மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை கவுன்சிலிங் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கியது. கூட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார். பள்ளிக்கல்வித்துறை ஆணையாளர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், 4-வது மண்டலதலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவ செல்வங்களின் நலனுக்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்துவது, அந்த திட்டங்களை வெற்றிகரமாக்குவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் பின்னர் துறை சார்ந்த கூட்டத்தில் அந்த கருத்துக்கள் பற்றி விவாதித்து முடிவு செய்யப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பேட்டரி டெஸ்ட் (திறனறிவு தேர்வு) திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம், நீண்ட ஓட்டம் என மாணவர்களின் திறனை கண்டறிந்து எந்த விளையாட்டில் அவர்கள் திறமையை காட்டுகிறார்கள் என்பதை அறிந்து அவர்களை விளையாட்டு பள்ளி விடுதிகளில் சேர்த்து படிக்க வசதி செய்யப்படுகிறது. அவர்கள் அங்கிருந்து தங்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த முடியும்.
பின்னர் மாநில, தேசிய, உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளை அரசு ஏற்று செயல்படுத்த உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மண்டல அளவில் தேர்ந்தெடுக்கப்படும் 10 மாணவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இன்று மாணவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக விபரீத முடிவுகளை எடுக்கும்நிலையில் இதுபோன்ற விளையாட்டுகளில் அவர்களின் கவனத்தை திசை திருப்பும்போது அதன் மூலமாக அவர்கள் தன்னம்பிக்கையை பெறுவார்கள்.
தன்னம்பிக்கை கவுன்சிலிங்
கனியாமூர் பள்ளியில் நடக்ககூடாத சோக சம்பவம் நடந்துவிட்டது. இதுபோன்ற சம்பவங்களில் காரணகர்த்தாவாக இருக்ககூடிய நிறுவனத்தினர், தனிநபர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு கோர்ட்டில் உள்ளது. முடிந்து வரும்போது கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவத்தில் யாரும் தண்டனையில் இருந்து நழுவ முடியாது.
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை (இன்று) தன்னம்பிக்கை கவுன்சிலிங் திட்டத்தை தொடங்க இருக்கிறார். 800 டாக்டர்களை கொண்டு இந்த திட்டம் செயல்பட இருக்கிறது. தமிழகத்தில் 413 கல்வி ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 2 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு, அந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கவுன்சிலிங் வழங்க உள்ளனர். 10 மணிக்குள் ஆசிரியர்கள் செயலி மூலமாக வருகை பதிவேடு செய்யாவிட்டால் சம்பள பிடித்தம் செய்யப்படும் என்பது தவறான தகவல்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.