கீழடி அருங்காட்சியகம் 2 மாதங்களில் திறக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்


கீழடி அருங்காட்சியகம் 2 மாதங்களில் திறக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
x

கீழடி அருங்காட்சியகம் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மதுரை


கீழடி அருங்காட்சியகம் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

நடுகல் மரபு

தமிழக அரசின் தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் ஆகியவை ஒருங்கிணைந்து உலக மரபு வார விழாவை கொண்டாடியது. அதன் ஒருபகுதியாக மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தமிழக நடுகல் மரபு கண்காட்சி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. கண்காட்சி தொடக்க விழாவில் கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையர் முனைவர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். பூமிநாதன் எம்.எல்.ஏ., ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் இயக்குனர் சுந்தர் கணேசன், யாக்கை மரபு அறக்கட்டளை குமரவேல் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கவும், அது குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வருகிற 25-ந் தேதி வரை உலக மரபு வாரவிழாவாக கடைப்பிடிக்கப்படுகிறது. வரலாறு, பண்பாடு தொடர்பான பல்வேறு விஷயங்களை அறிவதற்கு அகழ்வாராய்ச்சிகள், கல்வெட்டுகள், நடுகல் மரபுகள் பெரிதும் துணை நிற்கின்றன. ஏறத்தாழ 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் மனித இனம் தோன்றி இருந்திருக்க கூடும் என்பதற்கு ஆய்வு ரீதியான ஏராளமான முடிவுகள் உள்ளன. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பின் பயன்பாட்டை அறிந்த சமுதாயம் தமிழ் சமுதாயமாக இருக்கிறது என்பதற்கு மயிலாடும்பாறையில் தொல்லியல் துறையின் மூலம் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ரூ.8 கோடி ஒதுக்கீடு

அரசர்களை மட்டும் அல்லாமல் போரிலே வீர மரணம் அடைந்த வீரர்களையும் போற்றக்கூடிய வகையில் அவர்கள் நினைவாக நிறுவப்பட்ட நடுகற்கள் தமிழ்ச்சமூகத்தின் வீரத்தையும் பண்பாட்டையும் பறை சாற்றும் ஆவணங்களாக விளங்குகின்றன. இத்தகைய முன்னோர்களை குலதெய்வங்களாக வணங்கி வழிபடும் நடைமுறை நம்மிடையே இன்றளவும் உள்ளது. நமது முன்னோர்கள் கல்வி, தொழில், வேளாண்மை என பண்பட்ட நாகரிக சமுதாயமாக வாழ்ந்து உள்ளார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை திருமலை நாயக்கர் மகாலை தொன்மை மாறாமல் புனரமைப்பதற்கு 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த பணிகள் தொடங்க இருக்கிறது. அதுபோல மகாலில் ரூ.1 கோடி செலவில் வண்ண விளக்குகள் அமைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

95 சதவீத பணிகள்

மைசூருவில் இருந்து 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு மைபடிகள் வந்திருக்கின்றன. அவை சென்னையில் உள்ள மத்திய அரசின் தொல்லியல் அளவீட்டுத்துறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பாக கல்வெட்டு மைபடிகளை பாதுகாக்க, மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். 1919-ஆம் ஆண்டு வரை தான் தென் இந்தியாவில் இருந்து மைபடிகள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் தொல்லியல் துறையின் சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று கல்வெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். கீழடி அருங்காட்சியக கட்டிடப் பணி 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. கீழடியில் 1,200-க்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றில் என்னென்ன பொருட்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாதங்களில் அனைத்து பணிகளும் முடிந்து கீழடி அருங்காட்சியகம் திறக்கப்படும். அடுத்தக்கட்ட அகழாய்வு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story