மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
சேலம் அருகே மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அருகே மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் மாயம்
சேலம் அருகே உள்ள கோராத்துப்பட்டி சத்யா காலனியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி தங்கமணி (வயது 40). இவர்களுக்கு சந்துரு என்ற மகனும், நிஷா என்ற மகளும் உள்ளனர்.
சேகர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் தங்கமணி மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து 8-ந் தேதி வீராணம் போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமணியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள பழனிவேல் என்பவரின் விவசாய கிணற்றில் நேற்று காலை தங்கமணி பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டு தங்கமணியின் உடலை மீட்டனர். அதைத்தொடர்ந்து அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கணவர் இறந்த பிறகு தங்கமணி மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருந்துள்ளார். உறவினர்களிடம் கணவர் இல்லாத உலகில் தான் வாழ விரும்பவில்லை என்று அடிக்கடி கூறி வந்தது தெரியவந்தது. இதனால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.