சத்துணவு ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம்
சத்துணவு ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில, மாவட்ட செயற்குழு முடிவின்படி ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சத்துணவு திட்ட பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்பு கையெழுத்து இயக்கம் ஒன்றிய தலைவர் ஆரோக்கிய மேரி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணைத் தலைவர் பார்வதி வரவேற்று பேசினார். ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ராஜேஸ்வரி பொதுக்குழு கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட இணை செயலாளர் உமாமகேஸ்வரி, முன்னாள் ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட தலைவர் ராஜவேம்பு சத்துணவு திட்ட பாதுகாப்பு குறித்தும், உரிமை மீட்பு கையெழுத்து இயக்கம் குறித்தும் முதல்-அமைச்சருக்கு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தில் இருந்து கொடுக்கப்பட இருக்கும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கோரிக்கைகளை விளக்கியும், மாவட்ட அளவில் நடைபெற உள்ள பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். ஒன்றிய பொருளாளர் தெய்வானை நன்றி கூறினார். கூட்டத்தில் தா.பழூர் வட்டாரத்துக்கு உட்பட்ட அனைத்து சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.