சேலம் கோட்டத்தில் ஆய்வு: ரெயில் பயணிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்-அலுவலர்களுக்கு, ரெயில்வே பொதுமேலாளர் அறிவுறுத்தல்
சேலம் கோட்டத்தில் ஆய்வு செய்த தெற்கு ரெயில்வே பொதுமேலளார் ஆர்.என்.சிங், பயணிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சூரமங்கலம்:
பொதுமேலாளர் ஆய்வு
தெற்கு ரெயில்வே பொதுமேலாளராக ெபாறுப்பேற்ற பிறகு ஆர்.என்.சிங் நேற்று முதல் முறையாக சேலம் வந்தார். அவருடன் தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை பொறியாளர் ஸ்ரீதேஷ் ரத்தன் குப்தா உடன் இருந்தார். தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், சேலம் கோட்டத்தில் திருப்பத்தூர்- சேலம் மார்க்கத்தில் ஆய்வு செய்தார்.
அவருடன் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் மற்றும் அதிகாரிகள் குழு இருந்தனர்.
பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
தொடர்ந்து சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகளுடன் பொதுமேலாளர் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பேசியதாவது:-
ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ரெயில்களை பாதுகாப்பாக இயக்க ஒவ்வொரு துறையின் பங்களிப்பும் அவசியம். ரெயில் நிலையங்களில் ரெயில்களின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும். பயணிகளிடம் பழகும் போது கண்ணியமாகவும், மரியாதையுடனும் பழக வேண்டும்.
ரெயில்வே ஊழியர்களின் உடல்நிலையில் அக்கறை செலுத்துவதுடன் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கூடுதல் கோட்ட ெரயில்வே மேலாளர் சிவலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.