"சொத்துகளை விற்று பணம் கேட்டதால் கூலிப்படையை ஏவி கொன்றேன்"
“சொத்துகளை விற்று பணம் கேட்டதால் கூலிப்படையை ஏவி கொன்றேன்”
ஊத்துக்குளி,
சொத்துகளை விற்று பணம் கேட்டதால் கூலிப்படையை ஏவி கொன்றதாக நிதிநிறுவன அதிபர் கொலை வழக்கில் கைதான தந்தை போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கொலை
ஊத்துக்குளியை அடுத்த முதலிபாளையம் சிட்கோ செந்தில் நகரில் பகுதியை சேர்ந்த அப்புகுட்டி என்பவரது மகன் பாலசுப்பிரமணியம் (வயது31). நிதி நிறுவன அதிபராக இவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனின் தந்தை அப்புக்குட்டியை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அப்புக்குட்டி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
எனது மகன் பாலசுப்பிமணியம் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கும், நிதி நிறுவனம் நடத்தவும் அடிக்கடி என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தான். பணம் கொடுக்கவில்லை என்றால் தகராறு செய்வான். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. மேலும் என்னுடைய சொத்துக்களை விற்று பணம் தர வேண்டும் என மகன் மிரட்டி வந்தான். அவன் உயிருடன் இருந்தால் நிம்மதியாக வாழ விடமாட்டான் என எண்ணினேன். அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நான் திருப்பூரைச் சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் எனது நண்பன் மூலம் கூலி படையைச் சேர்ந்த 5 நபர்களுக்கு பணம் கொடுத்து மகனை கொலை செய்ய திட்டம் தீட்டி கொன்றேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ஒருவர் கைது
இந்த வழக்கில் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த கார்த்திக் (27) ஏற்கனவே கைது செய்யப்பட்டார். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கூலி படையைச் சேர்ந்த திண்டுக்கல் எஞ்சியோ காலனி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் குமார் (24) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.