ரூ.3½ லட்சம் செலவில் பாதாம், பிஸ்தா, உலர்திராட்சை உள்ளிட்ட பொருட்களால் உருவான பிரமாண்ட மாலைகள்


தினத்தந்தி 27 Aug 2023 3:00 AM IST (Updated: 27 Aug 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டையில் ரூ.3½ லட்சம் செலவில் பாதாம், பிஸ்தா, உலர்திராட்சை உள்ளிட்ட பொருட்களால் உருவான மாலைகள், கோவில் திருவிழாவுக்காக தோவாளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திண்டுக்கல்

நிலக்கோட்டையில் ரூ.3½ லட்சம் செலவில் பாதாம், பிஸ்தா, உலர்திராட்சை உள்ளிட்ட பொருட்களால் உருவான மாலைகள், கோவில் திருவிழாவுக்காக தோவாளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கோவில் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதி, பூக்கள் சாகுபடிக்கும், பூ வியாபாரத்திற்கும் புகழ்பெற்றது. இங்கு விளையும் பூக்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் அனுப்பப்பட்டு வருகிறது. இதுதவிர நிலக்கோட்டையில் பூமாலைகள் தொடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்டரின் பெயரில் பக்கத்து ஊர்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் பூமாலைகளை தொடுத்து அனுப்புகின்றனர்.

நிலக்கோட்டை அருகே பழைய காமன்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் நிலக்கோட்டையில் பூமாலைகள் கட்டி விற்பனை செய்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தோவாளையை சேர்ந்த சிலர் சந்தித்தனர். அப்போது அவர்கள், தோவாளையில் உள்ள சுடலைமாடன் சுவாமி கோவிலில் நடைபெற உள்ள ஆவணி மாத திருவிழாவில் சுவாமிக்கு படைக்க பாதாம் பருப்பு, பிஸ்தா, உலர் திராட்சை, முந்திரி பருப்பு, செர்ரிபழம் ஆகியவற்றால் மாலைகள் தொடுத்து தர வேண்டும் என்று ஆர்டர் கொடுத்தனர்.

பாதாம், பிஸ்தா

அதைத்தொடர்ந்து செல்வக்குமார் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை உள்ளிட்ட பொருட்களை கொண்டு 8 அடி நீள மாலை 2-ம், 4 அடி நீள மாலை 1-ம் என மொத்த 3 மாலைகளை கட்டினார்.பிரமாண்டமாக தயாரான இந்த மாலைகள் 350 கிலோ எடை கொண்டது. பின்னர் அந்த மாலைகளை தனது கடையின் முன்பு செல்வக்குமார் தொங்க விட்டார். இதனை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் அந்த மாலைகள் தோவாளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாலைகளை தொடுத்த செல்வக்குமார் கூறுகையில், "பொதுவாக திருவிழா காலங்களில் பூமாலைகள் தொடுக்க அதிக அளவில் ஆர்டர்கள் வரும். அந்த வகையில் தோவாளையை சேர்ந்த கோவில் நிர்வாகிகள், வித்தியாசமாக பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களால் மாலைகள் தொடுத்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர்களுக்காக தற்போது இந்த மாலைகள் தொடுத்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பாதாம், பிஸ்தா, கருப்பு உலர் திராட்சை, செர்ரிபழம், முந்திரி பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி, அவற்றை அடுக்குமுறையில் மாலைகளாக தொடுத்துள்ளேன். இந்த மாலைகள் சுமார் 350 கிலோ எடை கொண்டது. பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களுடன் சேர்த்து இந்த மாலைகளை தொடுப்பதற்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவானது" என்றார்.


Next Story