2 டன் காய்கறிகளால் பிரமாண்ட சிற்பங்கள்


தினத்தந்தி 7 May 2023 5:00 AM IST (Updated: 7 May 2023 5:01 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் கோடை விழாவையொட்டி 12-வது காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் 2 டன் காய்கறிகளால் பிரமாண்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் கோடை விழாவையொட்டி 12-வது காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் 2 டன் காய்கறிகளால் பிரமாண்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கோடை விழா

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் கோடை வாசஸ்தலமாக திகழ்கிறது. ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. அதேபோல் நடப்பாண்டில் நீலகிரியில் கோடை விழா நேற்று முதல் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக தோட்டக்கலைத்துைற சார்பில், கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது.

இதன் தொடக்க விழாவிற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். தோட்டக்கலை இணை இயக்குனர் ஷிபிலா மேரி வரவேற்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் ரிப்பன் வெட்டி காய்கறி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

காய்கறி சிற்பங்கள்

காய்கறி கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோட்டக்கலைத்துறை சார்பில், 2 டன் காய்கறிகளால் பல்வேறு சிற்பங்கள் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. குடை மிளகாய், உருளைக்கிழங்கு, சுரைக்காய், பஜ்ஜி மிளகாயை கொண்டு மக்காச்சோளம், கம்பு சிற்பங்கள் இடம்பெற்று இருந்தது. கத்தரிக்காய்களால் குட்டியுடன் 2 யானைகள் செல்வது போல் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

பாகற்காய்களால் முதலை தரையில் படுத்து இருப்பது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு வகையான காய்கறிகளை கொண்டு டிராகன், பாண்டா கரடி, மயில்கள், ஊட்டி 200-வது ஆண்டு விழா போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிற்பங்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தது. பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு இருந்த சிற்பங்களை பார்வையிட்டு கண்டு ரசித்ததோடு, சிற்பங்கள் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

செல்பி ஸ்பாட்

கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி, திண்டுக்கல், காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இருவாச்சி பறவை, மயில், முதலை, சிவலிங்கம், வரையாடு, வீணை, ஒட்டக சிவிங்கி, தேர், பவானி சாகர் அணை உள்ளிட்ட காய்கறி சிற்பங்களை அமைத்து காட்சிப்படுத்தினர்.

ஐ.நா.சபை இந்த ஆண்டை சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக அறிவித்து உள்ளதால், காய்கறி கண்காட்சியில் தானியங்கள் வடிவிலான காய்கறி சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பூங்கா நுழைவுவாயில் பகுதியில் ஐ லவ் கோத்தகிரி, மையப்பகுதியில் நம்ம கோத்தகிரி ஆகிய வாசகங்களுடனும், கழுகின் சிறகுகள் போன்ற வடிவில் செல்பி ஸ்பாட் 3 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. செல்பி ஸ்பாட்டுகளில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்கள்.

கலைநிகழ்ச்சிகள்

கோத்தகிரி பேரூராட்சி சார்பில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் பொருட்கள் டயர் மூலம் காட்டெருமை, மான், சேவல், கோமாதா, முயல், வீட்டு அலங்கார பொருட்கள் சிற்பங்களாக செய்து காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சள் துணிப்பைகள் வழங்கப்பட்டது.

மேலும் தன்னார்வ அமைப்பினர் புல்லை கொண்டு பழங்குடியினரின் மாதிரி வீடு, நுகர்வோரின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. பூங்காவில் வண்ண விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்று சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. காய்கறி கண்காட்சியையொட்டி பரத நாட்டியம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பரிசளிப்பு விழா

நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தா தேவி, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ராணா, குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷண குமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா, பேரூராட்சி துணை இயக்குனர் இப்ராகிம் ஷா, தாசில்தார் காயத்ரி, செயல் அலுவலர் மணிகண்டன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ், ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, துணை தலைவர் உமாநாத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது. மாலையில் பரிசளிப்பு விழாவுடன் நிறைவடைகிறது.


Next Story