குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு பரிசு கோப்பை
கோத்தகிரியில் திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்திய குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
கோத்தகிரி,
குப்பைகள் இல்லாத நகரங்களை உருவாக்கும் நோக்கில் தூய்மை இந்தியா திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேரூராட்சி சார்பில், தூய்மை குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் சுகாதார பணிகள் மாதத்தின் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து அலுவலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காம்பாய்கடை குடியிருப்பு மக்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்து மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கி வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தி வரும் காம்பாய்கடை குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. இதனை கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் வழங்கி ஊக்குவித்தனர்.