மகேந்திரமங்கலம் அருகே 6 மாத கர்ப்பிணியான சிறுமி திடீர் சாவு
பாலக்கோடு:
மகேந்திரமங்கலம் அருகே 6 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமி திடீரென இறந்தார்.
காதல் திருமணம்
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள கண்டகபைல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் முத்து (வயது 22). கூலித்தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் அவர்கள் 2 பேரும், அங்குள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் முத்துவும், 16 வயது சிறுமியும் கண்டகபைல் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
6 மாத கர்ப்பம்
அங்கு சிறுமியை, டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அவருக்கு குழந்தை திருமணம் நடந்ததும், இதனால் கர்ப்பமானதும் தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஊர்நல மகளிர் அலுவலர் சாந்தி மகேந்திரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், சிறுமியின் கணவர் முத்து மற்றும் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் மாமனார் சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சிறுமி திடீர் சாவு
இந்தநிலையில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி நேற்று காலை திடீரென இறந்தார். மேலும் அவருடைய வயிற்றில் இருந்த 6 மாத சிசுவும் பரிதாபமாக இறந்தது.
இதையடுத்து மகேந்திரமங்கலம் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முத்து மற்றும் சுரேசை தேடி வருகிறார்கள். குழந்தை திருமணம் செய்ததில் 6 மாத கர்ப்பிணியான சிறுமியும், அவருடைய வயிற்றில் இருந்த சிசுவும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.