இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குடிப்பதற்கு பணம் கேட்டு கணவர் தகராறு செய்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூர் வீரப்பனூர் கொலைமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவரது மனைவி சங்கீதா (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். கேரளாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக கூலி வேலை செய்து வந்த இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
கடந்த 19-ந் தேதி மாலை சிவக்குமார் குடிப்பதற்கு பணம் வேண்டும் என்று அவரது மனைவியிடம் கேட்டு உள்ளார். அதற்கு சங்கீதா பணம் தர மறுத்து உள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. மீண்டும் மறுநாள் காலையில் சிவக்குமார் அவரது மனைவிடம் சண்டை போட்டு உள்ளார்.
இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த ஜமுனாரத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.