சிறுத்தை தாக்கி சிறுமி பலி
ஊட்டி அருகே சிறுத்தை தாக்கி சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
ஊட்டி,
ஊட்டி அருகே சிறுத்தை தாக்கி சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
சிறுத்தை தாக்கியது
நீலகிரி மாவட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தேனாடுகம்பை பிரிவு அரக்காடு பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. அங்கு வடமாநில தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது புதர் மறைவில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று, அங்கு நின்று கொண்டிருந்த சிறுமியை கழுத்தில் தாக்கி இழுத்து சென்றது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து சத்தம் போட்டனர். சிறிது தூரத்தில் சிறுமியை கீழே போட்டு விட்டு சிறுத்தை சென்றது. இதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி நிஷாந்த் என்பவரது மகள் சரிதா (வயது 4) படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தாள்.
தீவிர கண்காணிப்பு
உடனே தொழிலாளர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு வாகனம் மூலம் கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சரிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தேயிலை தோட்டம் பகுதியில் சிறுத்தை அல்லது புலியின் கால் தடங்கள் காணப்பட்டது.
சிறுத்தை தாக்கி சிறுமி இறந்து இருக்கலாம். சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்கு செல்லும் போது தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து தேயிலை தோட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சம்பவ நடந்த இடத்தில் இருந்து மைனலா காப்புக்காடு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்றனர். தேயிலை தோட்டத்தில் சிறுத்தை தாக்கி சிறுமி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.