கடலூர் மாவட்டத்தில் கனமழை மின்னல் தாக்கி இளம்பெண், 4 மாடுகள் சாவு சூறைக்காற்றால் மரங்கள் விழுந்தன
கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மின்னல் தாக்கியதில் இளம்பெண் பலியானாா். மேலும் 4 மாடுகளும் உயிாிழந்தன.
கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மின்னல் தாக்கியதில் இளம்பெண் பலியானாா். மேலும் 4 மாடுகளும் உயிாிழந்தன.
மழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், அந்தமான் கடல் பகுதியில் உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியையொட்டியும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை, விட்டு விட்டு நேற்று காலை 9 மணி வரை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு 11 மணி வரை மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. பிற்பகல் 2.30 மணி வரை விட்டு, விட்டு பெய்த வண்ணம் இருந்தது.
வாகன ஓட்டிகள் அவதி
இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக பாரதிசாலையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. பிரதான சாலையான லாரன்ஸ் ரோட்டில் நாகம்மன் கோவில் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி, தெருவில் ஓடியது. அதோடு மழைநீருடன், கழிவுநீரும் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள், பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றவர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம், அண்ணா விளையாட்டு மைதானத்திலும் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது. இதனால் நடைபயிற்சிக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
மரங்கள் சாய்ந்து விழுந்தன
இதேபோல் சாலையோர வியாபாரிகளும் சிரமப்பட்டனர். குறிப்பாக அகல்விளக்குகள் விற்பனைக்காக குவித்து வைத்திருந்த வியாபாரிகள், வியாபாரம் இன்றி வேதனை அடைந்தனர். மேலும் சூறைக்காற்றுடன் மழை பெய்த போது கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் மரம் சாய்ந்து விழுந்தது. இருப்பினும் அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் செல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
அதுபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதிதெருவில் ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் ஓரம் நின்ற மரம் சாய்ந்து, அருகில் நிறுத்தப்பட்டு இருந்த காரின் முன் பகுதியில் விழுந்தது. இருப்பினும் சுற்றுச்சுவர் தாங்கிக்கொண்டதால் பெரிய அளவில் சேதம் இல்லை.
இளம்பெண் பலி
இந்நிலையில் விருத்தாசலம் அருகே உள்ள கச்சிபெருமாநத்தம் கிராமத்தை சேர்ந்த பாரதிராஜா மனைவி பானுப்பிரியா (வயது 30), அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த நெற்பயிரில் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பானுப்பிரியா மீது மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து பானுப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 மாடுகள் செத்தன
வேப்பூர் அடுத்த பூலாம்பாடி பகுதியில் இடி-மின்னலுடன் நேற்று மதியம் கனமழை கொட்டியது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சன்னாசி மகன் அய்யாசாமிக்கு (வயது 50) சொந்தமான ஒரு மாடும், முத்து மகன் அய்யாசாமியின் (40) 2 மாடுகளும், பழனிவேல் என்பவருக்கு சொந்தமான ஒரு மாடும் மின்னல் தாக்கி செத்தன. மேலும் மின்னல் தாக்கியதில் ச.அய்யாசாமி, மு.அய்யாசாமி ஆகியோருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மழை அளவு
இதேபோல் லால்பேட்டை, சிதம்பரம், அண்ணாமலைநகர், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 32.5 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
லால்பேட்டை- 32, சேத்தியாத்தோப்பு- 29. காட்டுமன்னார்கோவில்-28, புவனகிரி- 28, கலெக்டர் அலுவலகம்-26.2, சிதம்பரம் -19.8, அண்ணாமலைநகர் -18, பரங்கிப்பேட்டை-16.2, கொத்தவாச்சேரி-14, ஸ்ரீமுஷ்ணம்-8.2, வானமாதேவி-7. விருத்தாசலம் - 5, குப்பநத்தம் -4.6, பண்ருட்டி -2.3, குறிஞ்சிப்பாடி, வடக்குத்து, குடிதாங்கி தலா 2.