பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழப்பு: பேரூராட்சியின் அலட்சியம் தான் காரணம் - அன்புமணி ராமதாஸ்
பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழந்ததற்கு பேரூராட்சியின் அலட்சியமே காரணம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில், இயற்கை அழைப்புக்காக சென்ற போது, பூங்கா அமைப்பதற்காக தோண்டி வைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து ஹாசினி என்ற 8 வயது சிறுமி உயிரிழந்தது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு அரண்கள் வைக்கப்படாததும், கழிப்பறை வசதிகள் செய்து தரப்படாததும் தான் அப்பாவி சிறுமி உயிரிழந்ததற்கு காரணம் ஆகும். சின்னமனூர் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் தான் இதற்கு காரணம் ஆகும்!
சிறுமி ஹாசினியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த பேரூராட்சி அதிகாரிகள், அந்தக் குழந்தையின் உயிரிழப்பை மூடி மறைக்கவும் முயன்றிருக்கிறார்கள். பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் முயற்சியால் தான் சிறுமி ஹாசினியின் உயிரிழப்பு வெளியில் வந்திருக்கிறது!
அலட்சியமாக செயல்பட்டு ஹாசினியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.