கள்ளக்குறிச்சி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், மாமனார் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், மாமனார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
குடும்ப தகராறு
கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் புது காலனியை சேர்ந்தவர் தொப்புளான் மகன் புருஷோத்தமன் (வயது 22). மேளக்காரரான இவருக்கும் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லா நகரை சேர்ந்த பழனிவேல் மகள் ஐஸ்வர்யா (22) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மேளம் அடிக்க போகும் இடமெல்லாம் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறி புருஷோத்தமனை ஐஸ்வர்யா கண்டித்து வந்துள்ளார். இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பிருஷோத்தமன் தனது மனைவியிடம் உனது தாய் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா என கூறி துன்புறுத்தியாகவும், அதற்கு அவருடைய தந்தை உடந்தையாக இருந்ததாகவும் தெரிகிறது.
தற்கொலை
இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஐஸ்வர்யாவின் தாய் அம்சவள்ளி கொடுத்த புகாரின் பேரில் ஐஸ்வர்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக புருஷோத்தமன், தொப்புளான் ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.