முதுமலையில் பெண் பலி: கண்காணிப்பு கேமராக்களில் புலி நடமாட்டம் பதிவாகி உள்ளதா?-வனத்துறையினர் ஆய்வு
முதுமலையில் புலி கடித்து பெண் பலியான நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் புலி நடமாட்டம் பதிவாக உள்ளதா என வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
கூடலூர்
முதுமலையில் புலி கடித்து பெண் பலியான நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் புலி நடமாட்டம் பதிவாக உள்ளதா என வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
புலி தாக்கி பெண் பலி
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு ஆனைப் பாடி பகுதியைச் சேர்ந்த கேத்தன் மனைவி மாரி (வயது 60). இவர் கடந்த 31-ந் தேதி விறகு சேகரிக்க வனத்துக்குள் சென்றார். அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. இதைத் தொடர்ந்து வன ஊழியர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு புதருக்குள் புலி கடித்து மாரி இறந்து கிடந்தார். இதைத் தொடர்ந்து ஆதிவாசி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மசினகுடி போலீசார் மற்றும் முதுமலை வனத்துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கினர்.
புலி நடமாட்டம்
தொடர்ந்து புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், துணை இயக்குனர்கள் வித்யா, அருண்குமார், வனச்சரகர்கள் மனோகரன், மனோஜ், விஜயன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். தொடர்ந்து பெண்ணை கொன்ற இடத்தில் இருந்து புலியின் முடியை கைப்பற்றி டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் புலியின் நடமாட்டம் பதிவான பிறகு அதன் அடையாளத்தை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு வன ஊழியர்கள் மிகுந்த பாதுகாப்புடன் கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது புலி நடமாட்டம் எதுவும் கேமராக்களில் பதிவாக வில்லை. இருப்பினும் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.