ரெயிலில் பெண் தவறவிட்ட நகை, பணம் ஒப்படைப்பு
ரெயிலில் பெண் தவறவிட்ட நகை, பணம் ஒப்படைக்கப்பட்டது.
தென்காசி:
சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மனைவி திலகவதி (வயது 58). இவர் நேற்று முன்தினம் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று அதிகாலை ஊருக்கு திரும்பினார். ெரயில் தென்காசி வந்ததும் அவர் இறங்கி விட்டார். கீழே இறங்கிய பிறகுதான் அவருக்கு தான் வைத்திருந்த கைப்பை தவறிவிட்டதை கண்டுபிடித்தார். இதற்கிடையே அந்த ரெயில் நெல்லைக்கு சென்றுவிட்டது.
இதுகுறித்து திலகவதி உடனடியாக தென்காசி ரெயில் நிலைய போலீசில் புகார் தெரிவித்தார். அந்த கைப்பையில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 4 பவுன் தங்க சங்கிலி, ஒரு செல்போன் மற்றும் ரூ.15,976 ரொக்கப்பணம் ஆகியவை இருந்ததாக புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து தென்காசி ரெயில்வே போலீசார் நெல்லை சென்ற ெரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தனர். போலீஸ் முருகேசன் தலைமையிலான போலீசார் திலகவதி இருந்த பெட்டியை சோதனையிட்டபோது அங்கு கைப்பை இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த ரெயில் மீண்டும் எர்ணாகுளத்துக்கு செல்வதற்காக தென்காசிக்கு வந்தது. அதில் வந்த போலீசார் தென்காசி ெரயில்வே போலீசாரிடம் அந்த கைப்பையை ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், போலீசார் முருகேசன், ரவிக்குமார், மாரியப்பன், பார்வதி, அய்யப்பன் ஆகியோர் திலகவதியிடம் கைப்பை ஒப்படைத்தனர்.