14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தஞ்சாவூர்;
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிறுமி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தனது தாய் இறந்து விட்டதால் அந்த சிறுமி தந்தையுடன் வசித்து வந்தார்.ஆனால் தாயை இழந்து தவிக்கும் சிறுமிக்கு தாய்க்கு தாயாக இருக்க வேண்டிய தந்தையே வேலியே பயிரை மேய்வதை போல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்.
பாலியல் பலாத்காரம்
கடந்த 2015-ம் ஆண்டு முதல் அந்த சிறுமியை அவரது தந்தை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதை அக்கம் பக்கத்தினர் கண்டறிந்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2019-ம் ஆண்டு அந்த சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
பின்னர் அவரை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சுந்தரராஜன் விசாரித்து சிறுமியின் தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.