வீட்டு வேலை செய்ய கூறி தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே வீட்டு வேலை செய்ய கூறி தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உலகானஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். விவசாயி. இவருடைய மனைவி கோவிந்தம்மாள். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருந்தனர். இதில் 2-வது மகள் பவித்ரா (வயது 18), தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கோவிந்தம்மாளுக்கு உடல் நலக்குறைவால் வீட்டு வேலைகளை செய்ய முடிதாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பவித்ராவை உதவி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் பவித்ரா எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
விஷம் குடித்து தற்கொலை
இதனால் வீட்டு வேலைகளை செய்யாத பவித்ராவை, கோவிந்தம்மாள் கண்டித்துள்ளார். இதில் பவித்ரா மனமுடைந்து, கடந்த 9-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பவித்ரா பலியானார். இந்த தற்கொலை குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டு வேலை செய்ய கூறி தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.