28 நாட்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுமி - ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்ற நண்பர்கள்..!


28 நாட்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுமி - ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்ற நண்பர்கள்..!
x

முகச்சிதைவு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டானியா 28 நாட்கள் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.

சென்னை,

சென்னை ஆவடியை அடுத்த வீராபுரம் ஸ்ரீவாரி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். தையல்காரர். இவருடைய மனைவி சவுபாக்கியா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். இதில் இவர்களது மகளான டானியா (வயது 9), வீராபுரம் அரசினர் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு 3 வயது வரை இயல்பாக இருந்த முகம், அதன் பிறகு முகத்தின் வலது பக்கம் சிறிய கரும்புள்ளி தோன்றியது.

முதலில் சாதாரண ரத்தக்கட்டு என்று நினைத்த பெற்றோர், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அந்த கரும்புள்ளி நாளடைவில் பெரிதாக ஆரம்பித்தது. கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.40 லட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்தும் சிறுமியின் முகத்தில் இருந்த கரும்புள்ளி மாறாமல் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் குழந்தையின் முக அமைப்பே மாறுபட்டது. இதனால் டானியா மட்டுமின்றி அவரது பெற்றோரும் வேதனை அடைந்தனர்.

இதுபற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மர்மநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவள், 2½ லட்சம் பேரில் ஒருவருக்கு வரக்கூடிய அரிய நோயான முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிறுமியை கவனிப்பதற்கு தனியாக மருத்துவர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆகஸ்ட் 24-ஆம் தேதி சிறுமி டானியாவுக்கு 10 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் சுமாா் 9 மணி நேர முக சீரமைப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனா்.

அதன்பின்னர் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை சந்தித்து முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

இந்நிலையில், முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியா 24 நாட்கள் சிகிச்சை முடிந்து இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அங்கு தயாராக இருந்த அப்பகுதி மக்கள், ஆரத்தி எடுத்து சிறுமியை வரவேற்றனர். வீட்டிற்குள் சென்ற சிறுமி டானியா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை கைகூப்பி வணங்கி நன்றியை தெரிவித்தார்.

காத்திருந்த சிறுமியின் பள்ளி தோழர்கள், ரோஜா மலர்கள் கொடுத்து டானியாவை உற்சாகப்படுத்தினர். இதையடுத்து சக மாணவர்களுக்கு சிறுமி டானியா இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

டானியாவின் முகத்தையும் உயிரையும் காப்பாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறுமியின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story