ஈரோடு ஆர்.என்.புதூர் அரசு காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறுமிகள் மீட்பு
ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
6 சிறுமிகள் தப்பி ஓட்டம்
ஈரோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் அரசு காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதில் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, கருமுட்டை வழக்கில் தொடர்புடைய சிறுமியும் இந்த காப்பகத்தில் உள்ளார்.
இங்கு தங்கி இருக்க விரும்பாத சிறுமிகள் மற்றும் கருமுட்டை வழக்கில் தொடர்புடைய சிறுமி என மொத்தம் 6 பேர் காப்பக நிர்வாகி கவனிக்காத நேரத்தில் நேற்று முன்தினம் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடினர். பின்னர் மாலையில் காப்பகத்தில் சிறுமிகள் குறித்து கணக்கெடுக்கும் போது 6 சிறுமிகள் மாயமானது கண்டு காப்பக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆலோசனை
இதுகுறித்து காப்பக நிர்வாகி சித்தோடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 6 சிறுமிகளையும் தேடி வந்தனர். இதில் 3 சிறுமிகள் பெருமாள் மலை பகுதியில் நின்று கொண்டு இருந்தபோது போலீசார் மீட்டனர். மற்ற 3 சிறுமிகள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வைத்து போலீசார் மீட்டனர்.
காப்பகத்தில் இருக்க பிடிக்காமல் அந்த சிறுமிகள் வெளியேறியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. பின்னர் 6 சிறுமிகளும் ஈரோடு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் ஈரோடு அருகே கொள்ளுக்காட்டுமேடு பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.