வீர தீர விருதுக்கு 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்
வீர தீர விருதுக்கு 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 24-ந்தேதி தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தத் தினத்தன்று வீரதீர செயல் புரிந்த 13 வயதுக்குமேல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட உள்ளது.
தேசிய பெண் குழந்தை தினத்தன்று விருது பெறுவதற்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்துப் பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு இருத்தல் வேண்டும். 13 வயதுக்குமேல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதி உள்ள பெண் குழந்தைகள் இருப்பின் பெயர், தாய், தந்தை பெயர், முகவரி, ஆதார் எண், புகைப்படம், குழந்தை ஆற்றிய அசாதாரண வீர தீர செயல் மற்றும் சாதனை ஆகியவற்றுக்கான ஆதாரங்கள், ஒரு பக்கத்துக்கு மிகாத குறிப்பு ஆகியவைகளுடன் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், ராணிப்பேட்டை என்ற முகவரிக்கு 23-ந்தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும், அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.