பெண்கள் கல்லூரிக்குள் புகுந்து ரகளை செய்த வழக்கு: குண்டர் சட்டத்தில் கைதான என்ஜினீயரிங் மாணவர் தேர்வு எழுத பரோல்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பெண்கள் கல்லூரிக்குள் புகுந்து ரகளை செய்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதான என்ஜினீயரிங் மாணவர் தேர்வு எழுத பரோல் கொடுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரிக்குள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி மோட்டார் சைக்கிள்களுடன் புகுந்த சில இளைஞர்கள் அங்கிருந்த மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசியும், கல்லூரி காவலாளியை தாக்கவும் செய்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதன்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செயது பலரை கைது செய்தனர். இவர்களில் சிலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு குண்டர் சட்டத்தில் கைதான என்ஜினீயரிங் மாணவர் ஒருவருக்கு இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதவும், அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அவரது தந்தை மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் மகன் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுத வேண்டியுள்ளதால் ஜூன் 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அவருக்கு பரோல் வழங்கப்படுகிறது. அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உரிய கட்டணத்தை மனுதாரர் ஏற்க வேண்டும். மனுதாரர் மகனுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம். அப்போதும் போலீசார் பாதுகாப்பில் இருக்க வேண்டும். பரோல் முடிந்ததும் வருகிற 21-ந் தேதி மனுதாரர் மகன் மதுரை சிறை சூப்பிரண்டு முன்பு சரண் அடைய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.