'ஏழை மக்களின் வாழ்வில் ஏற்றம் இல்லாமல் ஏமாற்றமே கிடைத்துள்ளது'
தி.மு.க. ஆட்சியில் ஏழை மக்களின் வாழ்வில் ஏற்றம் இல்லாமல் ஏமாற்றமே கிடைத்துள்ளதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார்.
மின் கட்டண உயர்வால் பாதிப்பு
மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சேதுபதி வரவேற்றார். கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
அரசின் தவறுகளை தைரியமாக தட்டிக்கேட்கும் கட்சியாக த.மா.கா. உள்ளது. கடந்த 3 மாதங்களில் 2 பெரிய அணுகுண்டை மக்கள் மீது தாக்கியிருக்கிறார்கள். சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வால் மக்களை வதைக்கும் செயலில் ஆட்சியாளர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் கூறியவற்றை தற்போது செய்யவில்லை. தமிழக தொழில் துறையில் வளரும் மாவட்டமாக, பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலம் விளங்கி வருகிறது.
மக்கள் ஏமாற்றம்
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நூல் விலை உயர்வால் பெரிதும் பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டது. மின்கட்டண உயர்வால் தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். மாநகரில் வாடகை வீட்டில் அதிகம் பேர் வசிக்கிறார்கள். சொத்துவரி, மின்கட்டண உயர்வால் வாடகை உயர்ந்து துன்பத்தில் உள்ளனர். ஆட்சி மாற்றம் வரும். மக்கள் வாழ்வில் ஏற்றம் வரும் என்று தி.மு.க. கூறியது. ஏழைகள் வாழ்வில் ஏற்றம் வராமல் ஏமாற்றமே வந்துள்ளது. தி.மு.க.வின் பொய் வாக்குறுதியால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். கொங்கு மண்டல வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். திருப்பூர், கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளை பாதிக்கும் வகையில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, துணைத்தலைவர்கள் ஈரோடு ஆறுமுகம், குனியமுத்தூர் ஆறுமுகம், வடக்கு மாவட்ட தலைவர் சண்முகம், தெற்கு மாவட்ட தலைவர் ரத்தினவேலு, கோவை தெற்கு மாநகர் மாவட்ட தலைவர் வாசன், வடக்கு மாநகர தலைவர் செல்வராஜ், ஈரோடு புறநகர் மாவட்ட தலைவர் சண்முகம், திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் செழியன் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.