தமிழகம் முழுவதும் பழுதடைந்து காணப்படும் சாலைகளை விரைந்து செப்பனிட வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


தமிழகம் முழுவதும் பழுதடைந்து காணப்படும் சாலைகளை விரைந்து செப்பனிட வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x

தமிழகம் முழுவதும் பழுதடைந்து காணப்படும் சாலைகளை விரைந்து செப்பனிட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருநகர மாநகராட்சியில் பல இடங்களில் சாலைகள் மிகவும் பழுதடைந்து வாகனங்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மழைநீர்; வடிகால் அமைக்கும் பணி முடிவுபெறாமலும், சாலையின் ஓரம் குழிகள் மூடப்படாமலும் இருக்கிறது. இதனால் சாலையில் பயணிப்போர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிந்து, அந்தந்த பகுதிகளில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருந்த போதும் மக்களின் அத்தியாவசிய தேவையான சாலை, குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகள், இன்னும் சரிவர முழுமைப் பெறாமல் காணப்படுகிறது.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தான் உள்ளாட்சியின் பணி. ஆனால் உள்ளாட்சியில் நல்லாட்சி தருவோம் என்று பதவிக்கு வந்த பிறகு மக்கள் பணியில் கவனம் செலுத்தாமல் இருப்பது வேதனைக்குரியது. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.

தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் மாநில சாலைகளையும், உள்ளாட்சிக்கு உட்பட்ட சாலைகளையும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து செப்பனிட வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story