மலை உச்சிக்கு சென்று அண்ணாமலையார் பாதத்திற்கு பூஜை


மலை உச்சிக்கு சென்று அண்ணாமலையார் பாதத்திற்கு பூஜை
x
திருவண்ணாமலை

மலை உச்சிக்கு சென்று அண்ணாமலையார் பாதத்திற்கு பூஜை செய்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மலைக்கு செல்ல தடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும். மலையில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தால் அரிய வகை மூலிகை மரங்கள் எரிந்து சாம்பலாவதை தடுக்கும் வகையில் மலையின் மீது பக்தர்கள் ஏறி செல்ல வனத்துறையின் மூலம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மகா தீபத்தின் போது குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே மலை மீது சென்றுவர அனுமதி அளிக்கப்படும். இந்த நிலையில் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிலர் முறையாக அனுமதி பெறாமல் மலையின் மீது ஏறி சென்று சிறப்பு பூஜைகள் செய்து உள்ளனர்.

இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. இதில் மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு மலர்கள், மலர் மாலை, பழங்கள் மற்றும் நாணயங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்தது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளது.

ஆட்டோ டிரைவருக்கு அபராதம்

தகவல் அறிந்த திருவண்ணாமலை வனச்சரக அலுவலர்கள் மலையின் மீது அனுமதியின்றி சென்றது யார்? என்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மலை மீது ஏறியது திருவண்ணாமலை பே கோபுரம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் (வயது 30) என்பதும், மேலும் அவர் திருவண்ணாமலையில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இவர் மட்டும் மலை மீது ஏறி சென்றாரா? அல்லது வேறு யாரையாவது அழைத்து சென்றாரா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் மலைக்கு அனுமதியின்றி சென்ற முருகனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story