ஆடு, கோழிகள் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி
குண்டடம் வாரச்சந்தையில் இறைச்சி ஆடு கோழிகள் வரத்து அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சியடைந்தது.
வாரச்சந்தை
குண்டடம் வாரச்சந்தையில் சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் 9 மணி வரை கோழிகள் மற்றும் ஆடுகள் விற்பனை நடைபெறும் இந்த சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம், பூளவாடி, திருப்பூர், மேச்சேரி, கர்நாடக, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்காக கோழி, ஆடுகள் மற்றும் மாடுகள், வளர்ப்புக் கன்றுகள், காளைகன்றுகளை கொண்டு வருகின்றனர்.
இவைகளை ஊட்டி, ஈரோடு, கோவை, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி, கொடைக்கானல், கேரளா, ஆந்திரா கர்நாடக மேச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். வாரம்தோறும் சுமார் 2 ஆயிரம் கோழிகள் 3 ஆயிரம் ஆடுகள், இங்கு விற்பனைக்கு வருகின்றன.
விலை வீழ்ச்சி
தற்போது கோவில் விழாக்கள் வருவதால் இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளதால் ஆடுகளை வாங்குவதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் கடந்த வாரத்தில் இறைச்சிக்காக விற்கப்பட்ட 10 கிலோ எடையுள்ள ஒரு ஆடு ரூ.7ஆயிரத்து 500-க்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.7 ஆயிரத்திற்கு விலைபோனது. இதுபோல் ரூ.12 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள் இந்த வாரம் ரூ.10 ஆயிரத்து 500 ஆக குறைந்துவிட்டது.
குண்டடம் சந்தையில் கோழி, சேவல்கள் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. வீடுகளில் கோழி மற்றும் சேவல்களை வளர்ப்போர் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த கோழிகளை தாராபுரம், காங்கயம், பல்லடம், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கறிக்கடைக்காரர்கள் நேரடியாக வந்து வாங்கிச்செல்கின்றனர். கோழியின் எடைக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தவிர தரமான சண்டை சேவல்கள் சீசனில் நல்ல விலைக்கு விற்பனையாவதுடன் அவற்றுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. சேவல்சண்டை தடை செய்யப்பட்டிருந்தாலும் கேரளாவிலிருந்து சேவல்சண்டை பிரியர்கள் இங்கு வந்து சண்டையிட்டு பார்த்து தேர்வு செய்து சேவல்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்த வாரம் கோழிகள் மற்றும் சண்டையிடும் சேவல்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். இறைச்சிக்கு விற்கும் கோழிகள் சேவல்கள் கடந்த வாரம் 1 கிலோ ரூ.400 முதல் ரூ.460 வரை விலைபோனது. ஆனால் இந்தவாரம் ரூ.350 முதல் ரூ..420 வரை விற்பனையானது. இந்த விலை வீழ்ச்சி இன்னும் சில வாரங்கள் இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.