கோபால்பட்டி சந்தையில் ஆடு, கோழி விற்பனை மந்தம்
அம்மன் கோவில்களில் மாசித்திருவிழா எதிரொலியாக கோபால்பட்டி சந்தையில் ஆடு, கோழி விற்பனை மந்தமாக நடைபெற்றது.
சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் சனிக்கிழமை தோறும் ஆடு, கோழி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் திண்டுக்கல், நத்தம், மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்களது ஆடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். அப்போது உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த இறைச்சி வியாபாரிகள் மற்றும் கோவை, பொள்ளாச்சி, உடுமலைபேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து ஆடு, கோழிகளை வாங்கி செல்வார்கள். இந்தநிலையில் நேற்று கோபால்பட்டியில் நடந்த வாரச்சந்தையில் ஆடு, கோழிகளின் விலை சற்று குறைவாகவும், விற்பனை மந்தமாகவும் இருந்தது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த வாரம் சிவராத்திரி விழா நடைபெற்றது. தற்போது திண்டுக்கல், நத்தம் பகுதிகளில் அம்மன் கோவில்களில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏராளமான பொதுமக்கள் காப்புக்கட்டி விரதம் இருக்கின்றனர். அதேபோல் சுற்றுவட்டார கிராமங்களிலும் திருவிழாக்கள் அடுத்தடுத்து தொடங்கவுள்ளன. இதனால் வீடுகளில் இறைச்சி வாங்குவதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் ஆடு, கோழி விற்பனை மந்தமாக உள்ளது. அவற்றின் விலையும் சற்று குறைந்துள்ளது கடந்த மாதம் இதே சந்தையில் 15 கிலோ எடை கொண்ட 1 வெள்ளாடு ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால் தற்போது அவற்றின் விலை குறைந்து, 1 வெள்ளாடு ரூ.12 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. இதேபோல் கோழி விலையும் குறைந்தது என்றனர்.