மர்ம விலங்கு கடித்து 15 ஆடுகள் செத்தன
கம்பைநல்லூர் அருகே மர்ம விலங்கு கடித்துகுதறியதில் 15 ஆடுகள் செத்தன.
மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே மர்ம விலங்கு கடித்துகுதறியதில் 15 ஆடுகள் செத்தன.
மர்ம விலங்கு
கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம்பாடியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 55). விவசாயி. இவர் 40 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த ஆடுகளை தனது தோட்டத்தில் பட்டி அமைத்து அடைத்து வைத்திருந்தார். கடந்த வாரம் பட்டியில் இருந்த 5 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறின. பெருமாள் 35 ஆடுகளையும் மேய்ச்சலுக்கு விட்ட பிறகு மாலை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் பட்டிக்கு சென்ற போது 15 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியதில் செத்து கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள் அலறி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்றனர். அங்கு 15 ஆடுகள் செத்து கிடந்ததை கண்டு அவர்கள் கதறி அழுதனர்.
நிவாரணம்
இதுகுறித்து பெருமாள் குடும்பத்தினர் கூறுகையில், நாங்கள் 40 ஆடுகளை வளர்த்து வந்தோம். கடந்த வாரம் 5 ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் செத்தன. தற்போது 15 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து செத்து விட்டன.
இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினர். மர்ம விலங்கு கடித்து இறக்கும் சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.