செம்பட்டி ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை


செம்பட்டி ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 24 Jun 2023 2:30 AM IST (Updated: 24 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செம்பட்டி ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடி மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செம்பட்டி ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடி மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆட்டுச்சந்தை

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆட்டு சந்தைக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று செம்பட்டி ஆட்டுச்சந்தையும் களைகட்டியது. திண்டுக்கல் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலும் இருந்தும் ஆடு வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். செம்மறி, வெள்ளாடு, குறும்பாடு மற்றும் ஆட்டுக்குட்டிகளை வியாபாரிகள் அதிக அளவில் கொண்டு வந்திருந்தனர்.

ரூ.1 கோடிக்கு விற்பனை

மேலும் பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை வாங்குவதற்காக திண்டுக்கல் பேகம்பூர், சித்தையன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி, ஆத்தூர், வேடசந்தூர், குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து செம்பட்டிக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.

வழக்கம்போல் காலை 6 மணிக்கு ஆட்டுச்சந்தை தொடங்கியது. ஆனால் 2 மணி நேரத்தில் ஆடுகள் விற்றுத்தீர்த்தன. இந்த சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனையானது. இருப்பினும் 10 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட ஆடுகளை போட்டிப்போட்டு வாங்கிச்சென்றனர்.

இதன்மூலம் நேற்று ஒரேநாளில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆடு வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story