அய்யலூர் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆட்டுச் சந்தை
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இது, திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக திகழ்கிறது.
திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.
வடமதுரை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆடு, கோழிகளை விற்பனைக்கு அதிக அளவில் கொண்டு வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகை
இந்தநிலையில் வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முஸ்லிம்கள் அதிக அளவில் ஆடுகளை வாங்கிச் சென்று, வீட்டில் வைத்து வளர்த்து, பக்ரீத் நாளில் குர்பானி கொடுப்பது வழக்கம். இதனால் நேற்று அய்யலூரில் கூடிய ஆட்டுச்சந்தை களை கட்டியது. அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதியது.
வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளையும், சேவல்களையும் வாங்கி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். வெள்ளாடுகளைவிட செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆனது. நேற்று ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.400 வரையிலும், 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.7 ஆயிரத்துக்கும், செம்மறி ஆடு ரூ.7 ஆயிரத்து 500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.
ரூ.1 கோடிக்கு விற்பனை
இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாகவும், அடுத்த வாரம் நடைபெறும் சந்தையில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றனர்.
ஆடுகள் விற்பனை செய்ய வந்த விவசாயிகள் கூறுகையில், சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்த கால்நடைகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர்.