தீபாவளியை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ராணிப்பேட்டை வாரச்சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
ராணிப்பேட்டை வாரச்சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
வாரச்சந்தை
ராணிப்பேட்டையில், வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த வாரச் சந்தையில் காய்கறிகள் முதல் கருவாடு வரை அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் பொருட்களை கொண்டு வந்த விற்றும், தேவையான பொருட்களை வாங்கியும் செல்கின்றனர். மேலும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பலரும் இந்த சந்தைக்கு வந்து பொருட்கள் மற்றும் கால்நடைகளை வாங்கிச் செல்கின்றனர்.
ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
இந்தநிலையில் தீபாவளி நெருங்கி வருவதால், ராணிப்பேட்டை வாரச்சந்தையில் நேற்று ஆடு வியாபாரம் சூடு பிடித்தது. நேற்று அதிகாலை 4.30 மணியளவில் விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த ஆடுகளையும், கோழிகளையும், விற்பதற்காக ராணிப்பேட்டை சந்தைக்கு கொண்டு வந்தனர். ஆடு வாங்க ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கிச் சென்றனர்.
கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, நாட்டு ஆடு, சிவப்பு ஆடு, ராமநாதபுரம் வெள்ளை ஆடு உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஆட்டின் வயது, எடைக்கு தகுந்தவாறு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20,000 வரை விற்பனை செய்யப்பட்டது.
அதிகாலை 4.30 மணி முதல் காலை 11 மணி வரை ஆடு வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. ஏறத்தாழ ரூ.3 கோடி வரை ஆடு வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தீபாவளியை முன்னிட்டு துணிமணிகள், காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களும் விறுவிறுப்பாக விற்பனையானது.