அரசு விரைவு பஸ்கள் 3 மணி நேரம் நிறுத்தம்
கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் 3 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
கும்பகோணம்;
கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் 3 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
சென்னை பயணம்
கும்பகோணத்தில் இருந்து வடலூர், நெய்வேலி, சேத்தியாதோப்பு வழியாக சென்னை செல்லும் அரசு போக்குவரத்து கழக விரைவு பஸ்கள் நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை திடீரென நிறுத்தப்பட்டதால் சென்னை செல்ல இருந்த பயணிகள் அவதிப்பட்டனர்.தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கும்பகோணத்தில் இருந்து நாள்தோறும் விரைவு பஸ்கள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் மூலம் நாள்தோறும் ஏராளமான பயணிகள் மருத்துவ சிகிச்சை, வியாபாரம், வெளிநாட்டு விமான பயணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சென்னைக்கு சென்று வருகின்றனர்.
பஸ்கள் நிறுத்தப்பட்டன
இந்தநிலையில் நெய்வேலியில் நேற்று பா.ம.க. சார்பில் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் எம்.பி. கைது செய்யப்பட்டார்.இதனால் அங்கு திரண்டு இருந்த பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெய்வேலி வழியாக சென்ற பஸ் உள்ளிட்ட வாகனங்களை மறித்து மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் வடலூர், நெய்வேலி, பண்ருட்டி வழியாக இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ்களை நேற்று மதியம் 2 மணி முதல் நிறுத்த உத்தரவிட்டனர்.
விருத்தாசலம் வழியாக...
பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் சென்னைக்கு செல்ல கும்பகோணம் பஸ் நிலையம் வந்த நூற்றுக்கணக்கான பயணிகள் செய்வதறியாது தவித்தனர். இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு பிறகு கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு விருத்தாசலம் வழியாக பஸ்கள் இயக்கப்பட்டன. இதன்பிறகு கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு பஸ் போக்குவரத்து சீரானது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு பஸ்கள் இயக்கப்படாததால் 3 மணி நேரம் பயணிகள் அவதிப்பட்டனர்.