10 பவுன் நகை- பித்தளை பொருட்கள் திருட்டு
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் பித்தளை பொருட்களை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்;
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் பித்தளை பொருட்களை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூட்டு உடைப்பு
தஞ்சையை அடுத்த பிள்ளையார் பட்டி செல்லியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கம் (வயது 64). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான பட்டுக்கோட்டை தாலுகா கரம்பயம் பகுதிக்கு சென்றார்.இந்தநிலையில் நேற்று, ஸ்ரீரங்கம் வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் தனது வீட்டிற்கு வந்த அவர் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
10 பவுன் நகை- பித்தளை பொருட்கள்
மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் சில பித்தளை பொருட்கள் இல்லாதது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பித்தளை பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.