மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி திருட்டு
தஞ்சையில் பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை திருடி சென்ற பெண்ணை போலீசாா் தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்;
தஞ்சையில் பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை திருடி சென்ற பெண்ணை போலீசாா் தேடி வருகிறார்கள்.
5 பவுன் சங்கிலி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா புனல்குளம் பகுதியை சேர்ந்தவர் மாயக்கண்ணு மனைவி கல்யாணி(வயது 65). இவர் தஞ்சை ஆர்.ஆர்.நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக பஸ்சில் தஞ்சை புதிய பஸ் நிலையம் வந்தார். தொடர்ந்து அங்கிருந்து ஆர்.ஆர்.நகருக்கு செல்ல அரசு டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது கல்யாணி அருகில் நின்று கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் ஆர்.ஆர்.நகர் பஸ்நிறுத்ததை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.அப்போது அந்த பெண் பஸ்சில் திருட்டு சம்பவம் அதிகம் நடப்பதாவும், நகைகளை பணப்பையில் எடுத்து வைக்குமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய மூதாட்டி தன்னுடைய 5 பவுன் சங்கிலியை பணப்பையில் வைத்துள்ளார்.
வலைவீச்சு
பின்னர் ஆர்.ஆர்.நகரில் இறங்க வேண்டிய மூதாட்டியை அந்த பெண் தஞ்சை ஆலமர பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்று கூறிவிட்டு இறங்க செய்துள்ளார். பஸ் நிறுத்தத்தில் இறங்கிய உடனே பணப்பையை பார்த்த மூதாட்டி அதில் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பணப்பையை கிழித்து அதில் இருந்த 5 பவுன் சங்கிலியை அந்த பெண் திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் சங்கிலியை திருடி சென்ற பெண்ணை வலைவீசி தேடிவருகிறார்கள்.