40 பவுன் நகைகளை தவறவிட்ட நெல்லை பெண்


40 பவுன் நகைகளை தவறவிட்ட நெல்லை பெண்
x

செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 40 பவுன் நகைகளை நெல்லையை சேர்ந்த பெண் தவறவிட்டார். அந்த நகைகளை ரெயில்வே போலீசார் மீட்டு அந்த பெண்ணிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 40 பவுன் நகைகளை நெல்லையை சேர்ந்த பெண் தவறவிட்டார். அந்த நகைகளை ரெயில்வே போலீசார் மீட்டு அந்த பெண்ணிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

நெல்லை பெண்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி(வயது 45). இவர் கடந்த 4-ந் தேதி இரவு சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருநெல்வேலிக்கு பயணம் செய்தார்.அவருடன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த முகமது ஷெர்ஷா மகள் லூப்னா நாசரேத்(32) என்பவரும் பயணம் செய்தார்.

40 பவுன் நகைகளை தவற விட்டார்

அந்த ரெயில் பட்டுக்கோட்டை வந்ததும் லூப்னா நாசரேத் ரெயிலில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று முன்தினம் காலை நெல்லையில் இறங்கிய ஸ்ரீதேவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது 40 பவுன் நகை இருந்த தனது டிராவல் பேக் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

போலீ்சார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நெல்லை ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இந்த தகவலை பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்துக்கு தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை ரெயில்வே போலீசார், ஸ்ரீதேவியுடன் பயணம் செய்த பட்டுக்கோட்டை லூப்னா நாசரேத் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

தவறுதலாக எடுத்து சென்றார்

அப்போது அங்கு ஸ்ரீதேவியின் டிராவல் பேக் இருந்தது தெரிய வந்தது. அந்த பேக்கில் 40 பவுன் நகைகளும் பத்திரமாக இருந்தது.லூப்னா நாசரேத் மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவரின் டிராவல் பேக்குகளும் ஒரே மாதிரி இருந்ததால் லூப்னா நாசரேத் ஸ்ரீதேவியின் பேக்கை தவறுதலாக மாற்றி எடுத்துச்சென்றது தெரியவந்தது.

திரும்ப ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்துக்கு ஸ்ரீதேவியை வரவழைத்து நகைகள் அடங்கிய டிராவல் பேக்கை அவரிடம் ஒப்படைத்தார்.இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியும், அவருடைய கணவர் குமாரும் லூப்னா நாசரேத்துக்கும் பட்டுக்கோட்டை ரெயில்வே போலீசாருக்கும் நன்றி தெரிவித்தனர்.


Next Story