நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத்தேரோட்டம் நடத்த ஏற்பாடு
தங்கத்தேரோட்டம்
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் காலை சாமிக்கு 1,008 வடைமாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், நல்ல எண்ணெய், பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்களால் சாமிக்கு அபிஷேகமும் நடைபெறும். மதியம் 1 மணியளவில் அபிஷேகம் நிறைவு பெற்று சாமிக்கு அலங்காரம் நடக்கும். கட்டளைதாரர்கள் பதிவு செய்வதன் அடிப்படையில் சாமிக்கு வெள்ளிக்கவசம், தங்க கவசம், முத்தங்கி போன்ற அலங்காரம் நடைபெறும்.
மாலை 6 மணிக்கு உற்சவர், அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரும் தேரோட்டம் நடைபெறும். தங்கத்தேர் இழுப்பதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.
முன்பதிவு
இந்த நிலையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் உட்பிரகாரத்தில் தடுப்புகள் மற்றும் சாரங்கள் அமைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் மற்றும் மேற்கூரையில் வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் தங்க தேரோட்டம் கடந்த 5 மாதங்களாக நடைபெறவில்லை. தற்போது கோவில் உட்பிரகாரத்தில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று சாரங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றப்பட்டு விட்டன. இதனால் நேற்று முதல் தங்கத்தேர் இழுப்பதற்காக பக்தர்கள் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.இதையொட்டி கோவில் பணியாளர்கள் தங்கத்தேரை சுத்தம் செய்தல், அவற்றில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். விருப்பம் உள்ள பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து தங்கத்தேர் இழுக்கலாம் என கோவில் செயல் அலுவலர் இளையராஜா தெரிவித்து உள்ளார்.