8 பேரிடம் 19 பவுன் நகைகள் பறிப்பு


8 பேரிடம் 19 பவுன் நகைகள் பறிப்பு
x

மயிலாடுதுறை அருகே கோவில் குடமுழுக்கு விழாவில் கூட்டநெரிசலை பயன்படுத்தி 8 பேரிடம் 19 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை அருகே கோவில் குடமுழுக்கு விழாவில் கூட்டநெரிசலை பயன்படுத்தி 8 பேரிடம் 19 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோவில் குடமுழுக்கு

மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் மாயூரநாதர் கீழவீதி மற்றும் வடக்கு வீதி சந்திப்பில் சியாமளாதேவி கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நேற்று காலை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குடமுழுக்கு முடிந்தவுடன் பக்தர்களுக்கு உணவு பொட்டலங்களும், பிரசாத பைகளும் வழங்கப்பட்டன. அப்போது பக்தர்கள் பைகளை வாங்க முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் தள்ளு- முள்ளு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெண்கள் மற்றும் சிறுவர்கள் அணிந்திருந்த நகைகளை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினர்.

நகைகள் பறிப்பு

உடனே நகைகளை பறிகொடுத்த பெண்கள் கூச்சலிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மர்மநபர்களை தேடினர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

19 பவுன் நகைகள்

கோவில் குடமுழுக்கு விழாவில் தரங்கம்பாடி சாலை பொட்டவெளித்தெருவை சேர்ந்த நாராயணன் மனைவி பாப்பாத்தி (வயது 50) என்பவரிடம் மர்ம நபர்கள் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்று உள்ளனர். இதைப்போல நல்லத்துக்குடியைச் சேர்ந்த ஜோதி (55) என்பவரிடம் 2 பவுன் சங்கிலியையும் மர்ம நபா்கள் பறித்து சென்று உள்ளனர். மேலும் தரங்கம்பாடி சாலையை சேர்ந்த தேவிகா, கீழநாஞ்சில் நாடு பகுதியை சேர்ந்த நவநீதம், மாயூரநாதர் தெற்குவீதி பூக்கொல்லையைச் சேர்ந்த லட்சுமி, கண்ணாரத்தெருவைச் சேர்ந்த சாவித்திரி, சிறுவர்கள் சுப்பிரமணியன், சிஷ்டி ஆகிய 8 பேர்களிடம் மொத்தம் 19 பவுன் நகைகள் மர்மநபர்களால் பறித்து செல்லப்பட்டு உள்ளது.நகைகளை பறிகொடுத்தவர்கள் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர் இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் குடமுழுக்கு விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 8 பேரிடம் 19 பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story