தேவாலயங்களில் புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனை


தேவாலயங்களில் புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனை
x

புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வேலூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர்

குருத்தோலை ஞாயிறு

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகைக்கு (உயிர்ப்பு பெருநாள் விழா) முன்பு அனுசரிக்கும் தவக்காலமான சாம்பல் புதன் கடந்த பிப்ரவரி மாதம் திருப்பலியுடன் தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு ஆக அனுசரிக்கப்பட்டது. அன்று ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் இறைவனான இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்றும் 3-ம் நாள் உயிரோடு எழுந்தார் என்றும் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது.

அவர் சிலுவையில் அறைந்த தினம் புனித வெள்ளி என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. புனிதவெள்ளியான நேற்று இயேசு சிலுவையை தூக்கி கொண்டு செல்லும் போதும், அதில் அறையப்பட்டு கொல்லப்பட்ட நேரத்திலும் பைபிளில் கூறப்பட்டுள்ள வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கம் நடைபெற்றது.

சிலுவை பாதை

வேலூர் விண்ணரசி மாதா ஆலயத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அதேபோல் வேலூர் ஓல்டுடவுனில் உள்ள ஆரோக்கியமாதா ஆலயத்திலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

வேலூர் கோட்டை எதிரே உள்ள சி.எஸ்.ஐ. மத்திய ஆலயத்தில் சிறப்பு ஆராதனையும், பிரார்த்தனையும் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சீயோன் பெந்தேகொஸ்தே ஆலயத்திலும் பிரார்த்தனை நடந்தது. சத்துவாச்சாரியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தோட்டப்பாளையத்தில் உள்ள அருளானந்தர் ஆலயம் உள்பட வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது. பல தேவாலயங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஈஸ்டர் பண்டிகை

நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று ஆலயங்களில் கூட்டு திருப்பலிகள் நடைபெறும். தவக்காலத்தில் விரதம் இருப்பவர்கள், தங்கள் விரதத்தை முடித்து, விருந்துண்டு மகிழ்வார்கள். நண்பர்களுக்கும் விருந்தளித்து ஈஸ்டர் பெருவிழாவை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.


Next Story