புறநோயாளி சீட்டு வழங்கும் மையத்தை அதிகப்படுத்த கோரிக்கை


புறநோயாளி சீட்டு வழங்கும் மையத்தை அதிகப்படுத்த கோரிக்கை
x
திருப்பூர்


உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளி சீட்டு வளங்கும் மையத்தை அதிகரிக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புறநோயாளி சீட்டு

உடுமலை வ.உ.சி.வீதியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு அளிக்கப்படுகின்ற இலவச சேவையை பெறுவதற்காக ஏழை, எளிய, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

சிகிச்சை பெறுவதற்கு முன்பு பெயர் மற்றும் வயதை எடுத்துக்கூறி புறநோயாளி சீட்டு வாங்க வேண்டியது அவசியமாகும். அதன் பின்பு வரிசையில் நின்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோயின் தாக்கத்தை டாக்டரிடம் எடுத்துக்கூறி மருந்து, மாத்திரைகளை பெற்று செல்கின்றனர்.

புறநோயாளி சீட்டு வழங்கும் மையம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தலா ஒன்று தான் உள்ளது. இதனால் சீட்டு வாங்குவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.இதன் காரணமாக நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பருவநிலை மாறுபாடு காரணமாக தற்போது சளி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட தொற்று நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளது.இதன் காரணமாக ஆஸ்பத்திரியில் வழக்கத்தை விடவும் கூட்டம் அதிகமாக உள்ளது. டாக்டரை பார்க்கும் முன்பு புறநோயாளி சீட்டு வாங்க வேண்டும். ஆனால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா ஒரு மையம் மட்டும் உள்ளதால் நோயோடு அங்கு ஒருவர் மீது ஒருவர் உரசிய படி நீண்ட நேரம் வரிசையில் கால்கடுக்க காத்திருக்க வேண்டி உள்ளது.

அதிகரிக்க செய்ய வேண்டும்

இதனால் நோயின் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்புகள் உள்ளது. அத்துடன் கூட்டம் அதிகமாக உள்ளதால் சீட்டு பெற்ற பின்பு டாக்டரை பார்ப்பதற்கும் காத்திருக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக பெண்கள் மற்றும் ஆண்களுக்கு புறநோயாளி சீட்டு வழங்கும் மையத்தை அதிகரிக்க செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.

இதனால் நீண்ட நேரம் நோயோடு காத்திருந்து அவதிக்கு உள்ளாக வேண்டிய அவசியம் இருக்காது. எனவே உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளி சீட்டு வழங்கும் மையத்தை அதிகரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதால் ஆஸ்பத்திரிக்கு வருகை தருகின்ற பொதுமக்களுக்கு முகவசம் அணிவதற்கும் தனிமனித இடைவெளியை கடை பிடிப்பதற்கும் அறிவுறுத்த வேண்டும்.என்று தெரிவித்தனர்.


Next Story