இருளர் சமுதாய மக்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டுவதற்காக பூமிபூஜை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே செந்தமிழ்நகர் திட்டத்தின் கீழ் இருளர் சமுதாய மக்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டுவதற்காக பூமிபூஜை போடப்பட்டது. தனியாரிடம் இடம் வாங்கி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சியால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே செந்தமிழ்நகர் திட்டத்தின் கீழ் இருளர் சமுதாய மக்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டுவதற்காக பூமிபூஜை போடப்பட்டது. தனியாரிடம் இடம் வாங்கி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சியால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செந்தமிழ்நகர் திட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், செந்தமிழ்நகர் என்ற திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் பல்லாண்டு காலமாக இருக்க வீடு இன்றி புறம்போக்கு நிலத்தில் இருக்கும் விளிம்பு நிலை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுத்து அதில் வீடு உள்ளிட்ட வசதிகளை அரசு சார்பில் செய்து கொடுத்து வருகிறார்.இந்த திட்டத்தில் வீடு கட்டிக்கொடுப்பதுடன் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை அருகே 30 ஆண்டுகளாக இருளில் தவித்த கிராம மக்களுக்கு பட்டா வழங்கி விளக்கு வசதி செய்து கொடுத்தார்.
இருளர் சமுதாய மக்கள்
தற்போது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மருதாநல்லூர் ஊராட்சியில் இருளர் சமுதாய மக்கள் நீர்நிலை பகுதியில் வசித்து வந்தனர். அவர்களுடைய இருப்பிடம் தேடிச்சென்று சாதிச்சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். அப்போது அவர்கள் பட்டா, வீடு கோரிக்கையை வைத்தனர்.இதையடுத்து விளிம்புநிலை மக்களான இருளர் சமுதாயத்தை சேர்ந்த 61 குடும்பங்கள் நீர்நிலை புறம்போக்கில் வசித்து வந்தது தெரிய வந்தது. ஆனால் நீர்நிலை புறம்போக்கில் அவர்களுக்கு பட்டா வழங்க முடியாது என்பதால் அரசின் முயற்சியோடு தனியார் இடத்தை விலைக்கு வாங்கி அதில் வீடு கட்ட முடிவு செய்யப்பட்டது.
வீடு கட்டுவதற்கு பூமிபூஜை
அதன்படி அரசு சார்பில் இடம் வாங்கப்பட்டு ரூ.4 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் ஒவ்வொரு வீடும் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. தமிழக அரசு கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் பூமிபூஜை போடப்பட்டு அதற்கான பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, தாசில்தார் வெங்கடேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கான்கிரீட் வீடு
இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் செந்தமிழ்நகர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி 9 இடங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது.தஞ்சை ஒன்றியம் புதுக்குடி அருகே வீடு கட்டப்பட்டு வருகிறது. தற்போது 2-வது கட்டமாக கும்பகோணம் ஒன்றியத்தில் இருளர் சமுதாய மக்களுக்கு, தனியாரிடமிருந்து இடம் அரசு சார்பில் விலை விலைக்கு வாங்கி தரமான கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்பட உள்ளது.என்றார்.