அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை கண்டித்து செய்யாறில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்யாறு
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை கண்டித்து செய்யாறில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆன்லைனில் குளறுபடி
செய்யாறு டவுன் ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இரண்டு சுழற்சிகளாக சுமார் 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை பாடப் பிரிவுகளில் படித்து வருகின்றனர்.
திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தேர்வு கட்டணம் தேர்வு மறுமதிப்பீடு செய்தல் காண கட்டணம், அரியர் தேர்வுக்கான கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிலர் தேர்வுத்தாள் திருத்தி மறுமதிப்பீடு செய்திட ரூ.400 செலுத்தி அதற்கான முடிவுகள் வராத நிலையில், தேர்வு கட்டணம் பாடம் ஒன்றுக்கு 90 வீதம் செலுத்த வேண்டி உள்ளது.
மேலும் மாணவர்கள் எழுதிய தேர்வில் அரியர் எத்தனை உள்ளது என அறிய முடியாமல் ஆன்லைனில் குளறுபடி நீடிக்கிறது. தேர்வு கட்டணம் செலுத்திய பிறகும் அதற்கான ஒப்புதல் ரசீது வருவதில்லை எனவும், தொடர்ந்து தேர்வு கட்டணம் கட்டவில்லை என்ற நிலையே மாணவர்களுக்கு தகவல் வருவதாகவும் கூறப்படுகிறது.
சாலை மறியல்
இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வுக்கான கட்டணம் செலுத்துவதில் குளறுபடி நீடிப்பதாகவும், முறையாக ஆன்லைன் சர்வர் பராமரிக்கப்படாததால் மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பணம் செலுத்தியதாக தெரிவிக்கின்றனர்.
மாணவர்கள் பாதிக்க வண்ணம் திருவள்ளூர் பல்கலைக்கழகம் நிர்வாகத்தின் செம்மைப்படுத்த வேண்டும் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை கண்டித்து இன்று காலை கல்லூரி முன்பு செய்யாறில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்யாறு இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் விரைந்து சென்று கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். பின்னர் கல்லூரி முதல்வரிடம் அழைத்துச் சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது கல்லூரி முதல்வர் கலைவாணி பேசுகையில், இது தொடர்பாக துறைவாரியாக மாணவர்களுக்கு தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது.
ஒருமுறை பணம் செலுத்தினால் போதுமானது, மீண்டும் யாரும் பணம் செலுத்த வேண்டாம். பண பரிவர்த்தனை ஆன ஐ.டி. எண் இருந்தால் மட்டும் போதும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவீர்கள் என கூறினார்.
இதையடுத்து மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.