இழப்பீடு வழங்காததால் அரசு ஜீப்பை 2-வது முறையாக ஜப்தி செய்ய முயற்சி
விபத்தில் காயம் அடைந்தவருக்கு, இழப்பீடு வழங்காததால் அரசு ஜீப்பை 2-வது முறையாக ஜப்தி செய்ய முயன்ற சம்பவம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜீப் மோதி காயம்
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 68). இவர், கடந்த 2003-ம் ஆண்டு கொடைக்கானலுக்கு சென்றார். அப்போது திண்டுக்கல் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தின் ஜீப் மோதியதில் அவர் காயம் அடைந்தார். இதையடுத்து தனக்கு இழப்பீடு கேட்டு, திண்டுக்கல் சப்-கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 810 வழங்கும்படி உத்தரவிட்டது.
ஆனால் இழப்பீடு வழங்காததால் பழனிச்சாமி, கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு வாகனத்தை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார்.
2-வது முறையாக முயற்சி
இதையடுத்து கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி இருந்த நிலஅளவைத்துறை உதவி இயக்குனர்அலுவலக ஜீப்பை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றனர். அப்போது இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் கோர்ட்டு ஊழியர்கள் திரும்பி சென்றனர். ஆனால் பழனிசாமிக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
இதனால் கலெக்டர் அலுவலக வாகனத்தை ஜப்தி செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் நேற்று 2-வது முறையாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் அலுவலகம் முன்பு நின்ற கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜீப்பை ஜப்தி செய்ய முடிவு செய்தனர்.
இதற்காக ஜீப்பில் கோர்ட்டு ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டினர். அதை அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்தனர். அதன்பேரில் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.