அரசு பஸ்-ஆட்டோ மோதல்; 3 பேர் பலி


அரசு பஸ்-ஆட்டோ மோதல்; 3 பேர் பலி
x

திருப்பத்தூர் அருகே அரசு பஸ்- ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில், சாவு வீட்டுக்கு மேளம் அடிக்க சென்ற 3 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

சாவு வீட்டுக்கு...

திருப்பத்தூர், பெரியகரம், சந்திரபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மேளம் அடிக்கும் தொழிலாளிகள் 10 பேர், துக்க நிகழ்ச்சிக்கு மேளம் அடிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் திருப்பத்தூர் பகுதியில் இருந்து ஒரு ஆட்டோவில் கிருஷ்ணகிரி மாவட்டம் தபால்மேடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

கந்திலியை அடுத்த சந்தைமேடு பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக ஓசூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது.

பஸ் மோதி 3 பேர் பலி

இதில் ஆட்டோவில் பயணம் செய்த திருப்பத்தூர் கசி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாரதி (வயது 20), சந்திரபுரத்தை சேர்ந்த கார்த்திக் (18) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த அதே பகுதியை சேர்ந்த ஈசன் (20), கசிநாயக்கன்பட்டி அரவிந்தன் (19), திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அரவிந்தன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

7 பேர் காயம்

மேலும் காயமடைந்த சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார், குரிசிலா பட்டு கிராமத்தை சேர்ந்த அஜித் (18), பெரியகரத்தை சேர்ந்த ஈஸ்வரன், அச்சமங்கலத்தை சேர்ந்த சஞ்சய் (21) புத்தகரம் பகுதியை சேர்ந்த வேலு (24) உள்பட 6 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈசன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

சாலை மறியல்

பலியானவர்களை பார்க்க அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று கூறியும், இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும், இறந்தவர்களின் உடல்களை வாங்கமாட்டோம் என்று கூறியும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் மற்றும் டவுன் போலீசார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் சென்று பாதிக்கப்பட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக நிவாரண உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர்.

உடலை வாங்க மறுப்பு

அப்போது ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தொடங்கி வைக்க அரசு மருத்துவமனைக்கு வந்து இருந்தும், அரசு மருத்துவமனையில் பலியானவர்கள் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் பார்க்கவில்லை எனக்கூறி மறியலில் ஈடுபட்டவர்கள், இறந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம் என கூறினார்கள்.

இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேளம் அடிக்கும் தொழிலாளிகள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story