பனை மரத்தில் அரசு பஸ் மோதி விபத்து


பனை மரத்தில் அரசு பஸ் மோதி விபத்து
x

பெரம்பலூர் அருகே பனை மரத்தில் அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி உள்பட 16 பேர் காயம் அடைந்தனர்.

பெரம்பலூர்

பனை மரத்தில் அரசு பஸ் மோதியது

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா லெப்பைக்குடிக்காட்டில் இருந்து பெரம்பலூர் வழியாக திருச்சிக்கு ஒரு அரசு பஸ் நேற்று காலை 8.40 மணிக்கு பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சை திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, சனமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகாலிங்கம் (வயது 52) என்பவர் ஓட்டினார்.

துறையூர் தாலுகா, சொரத்தூர், இந்திரா நகரை சேர்ந்த சந்திரகுமார் (40) கண்டக்டராக பணியாற்றினார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லாபுரம் பஸ் நிறுத்தத்தை தாண்டி பஸ் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சென்று சாலையோர பள்ளத்தில் தறிக்கெட்டு ஓடி பனை மரத்தில் மோதியது.

கர்ப்பிணி உள்பட 16 பேர் காயம்

இந்த விபத்தில் பனை மரம் சாய்ந்து விழுந்தது. பஸ்சின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய பயணிகள் அய்யோ, அம்மா... காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும், மங்களமேடு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த கர்ப்பிணி உள்பட 16 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்தில் சிக்கிய பஸ்சை போலீசார் அப்புறப்படுத்தினர்.

படுகாயமடைந்த பெரம்பலூர் தனியார் ஐ.டி.ஐ. மாணவரான கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கீழக்கல்பூண்டி பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் தங்கராசு (17) உள்பட 3 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த 6 மாத கர்ப்பிணியான மேல கல்பூண்டி கிழக்கு தெருவை சேர்ந்த ஆனந்த் மனைவி மகாராணி (22) உள்பட 13 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story