மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார்.
பெரம்பலூர் மாவட்டம், ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 36). இவர் சொந்த வேலை நிமித்தமாக தனது மோட்டார் சைக்கிளில் ஈச்சங்காட்டில் இருந்து கரூர் மாவட்டம், மாயனூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் பொன்ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த பொன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பொன்ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பொன்ராஜ் மனைவி கிருத்திகா கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.